மருத்துவமனைக்குள்ளிருந்து வரும் கண்ணாடி உடைந்த அந்த ஆம்புலன்ஸிலிருந்து சிதறி விழுகிற உடல் குலைநடுங்கச் செய்கிறது. இந்திய தலைநகரில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையின் வாசலின் தன் தாயை அமர வைத்துவிட்டு பத்துமணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் மகனின் கதறல் இதயத்தை நொறுங்க வைக்கிறது. மயக்கமுற்றுக் கிடக்கிற தம்பியை தட்டியெழுப்பி, "இன்னும் கொஞ்சம் நேரத்தில் படுக்கை கிடைத்துவிடும்... அதுவரை உயிரைப் பிடித்துக்கொண்டிரு" என்று நம்பிக்கை புகட்டிக் கொண்டிருக்கிற அந்த சகோதரியின் நிலையை கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் நோயாளிகளையும் நோயுற்று இறந்த உடல்களையும் சுமந்துகொண்டு அலறும் ஆம்புலன்ஸ்களின் சத்தம் இடைவெளியில்லாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. பிழைத்திருப்பவர்கள் ஓரிரவு தாங்குவார்களா என்றுகூடத் தெரியவில்லை. நம்பிக்கையற்று நிற்கிறது தேசம்! - வெ. நீலகண்டன்