தேனி: போடிநாயக்கனூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவில் முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 350 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கோவில், தற்போது இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதில் கோயில் மூலவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மந்திரங்கள், பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் மண்டல பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.