புதுக்கோட்டை: கீழே கிடந்த இரண்டு பவுன் தங்க சங்கிலி மற்றும் கை செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப்பள்ளி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (13). இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவர் பள்ளி முடிந்து, வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது ஒரு நகைப்பெட்டி கீழே கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது, அதில் 15.600 கிராம் எடையுள்ள தங்க செயின் மற்றும் தங்க கைசெயின் இருந்துள்ளது.அதையெடுத்த தமிழரசன் பள்ளி தலைமை ஆசிரியை நாச்சம்மை மற்றும் வகுப்பாசியர் சி.ஞானமணி தெரிவித்தார். அதனையடுத்து ஆலவயல் பள்ளி தலைமையாசிரியை நாச்சம்மை சிறுவனை அழைத்து பொன்னமராவதி காவல்நிலையத்திற்கு சென்று தங்க செயின் மற்றும் கை செயினை காவல் உதவி ஆய்வாளர் வீரமுத்திடம் ஒப்படைத்தார்.தற்போது, நேர்மையாக செயல்பட்ட மாணவர் தமிழரசனை பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.