திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில், பாஜக மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் போது ராகுல், மம்தா, மு.க.ஸ்டாலின் ஆகியோரை கரப்பான் பூச்சியாக சித்தரித்த பொம்மையுடன் ஊர்வலம் நடந்தது.ஜனநாயக மாண்புகளையும் நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாக்க வலியுறுத்தி, திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பாஜக கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பாஜக திருப்பூர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் மற்றும் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேசியக் கொடிகளை ஏந்தி பேரணியில் பங்கேற்று, சின்னச்சாமி அம்மாள் பள்ளி வரை சென்றனர். பேரணியில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை கரப்பான் பூச்சிகளாகச் சித்தரிக்கும் பொம்மைகளும் எடுத்துச் செல்லப்பட்டன.தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் மற்றும் தேச விரோத சக்திகளின் பின்னணியில் சில இயக்கங்கள் செயல்படுவதாகவும், அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் எட்டு பெருங்கோட்டங்களில் பாஜக சார்பில் பேரணிகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
Comments